சித்திரை திருநாள்; மருதமலை முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. - TAMIL NEW YEAR - TAMIL NEW YEAR
🎬 Watch Now: Feature Video
Published : Apr 14, 2024, 10:41 AM IST
கோயம்புத்தூர்: தமிழ் புத்தாண்டான சித்திரை திருநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரைக்கனி என்று கொண்டாடப்படும் இன்றைய தினத்தில், பலரும் இல்லங்களில் செல்வம் பெருக, வாழ்க்கை செழிக்க வேண்டி மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும், தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் நகைகளை வைத்து வீட்டிலும், கோயில்களுக்கு சென்றும் வழிபடுவர்.
அதன்படி, சித்திரை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள முருகனின் ஏழாம் படைவீடான மருதமலை முருகன் கோயிலில், அதிகாலையில் இருந்தே அதிகளவிலான பக்தர்கள், வழிபாடு செய்வதற்காக குவிந்துள்ளனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். மேலும், பல்வேறு பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்குள் படிக்கட்டு வழியே செல்வதற்கு 7 மணியில் இருந்துதான் அனுமதி என்பதால், படிக்கட்டு வழிகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்த நிலையில், சிலர் தடுப்புகளைத் தாண்டி குதித்து சென்றனர். மேலும் கோயில் அடிவாரத்திலும், கோயிலின் மேல் பிரகாரத்திலும் காவடி ஏந்தியவாறு பக்தர்கள் பலரும் உற்சாக நடனமாடி, முருகனை வழிபட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.