பண்ணாரி கோயில் குண்டம் திருவிழா; தாரை தப்பட்டை முழங்க திருவீதி உலா புறப்பட்ட அம்மன்!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க திருவீதி உலா புறப்பட்ட பண்ணாரி அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நேற்று அதிகாலை பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதற்கிடையே, இன்று அதிகாலை கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட அம்மன் சப்பரத்தில், பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் எழுந்தருளினர்.
இன்று முதல் அலங்கரிக்கப்பட்ட பண்ணாரி அம்மன் சப்பரம் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற உள்ளது. கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையம் கிராமத்திற்குச் சென்றது. பக்தர்கள் தோளில் அம்மன் சப்பரத்தை சுமந்தபடி, பக்தி பரவசத்துடன் திருவீதி உலா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.