அம்பத்தூரில் ஒரே நாளில் 3 கோயில்களில் கொள்ளை.. போலீசார் தீவிர விசாரணை! - surappattu Temple theft
🎬 Watch Now: Feature Video


Published : Feb 18, 2024, 8:16 AM IST
சென்னை: சென்னை, அம்பத்தூர் அருகே சூரப்பட்டு மேட்டூர் பகுதியில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், நேற்று (பிப்.17) காலை அர்ச்சகர் வழக்கம்போல் நடையை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, கோயில் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்கத் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து, கோயில் நகை திருட்டுச் சம்பவம் குறித்து, அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, சிலையின் மீது இருந்த கைரேகைகள் மற்றும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயிலிலும் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல், சூரப்பட்டு எழில் நகரில் அமைந்துள்ள விநாயகர் கோயிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
ஒரே நாளில், அம்பத்தூர் சூரப்பட்டில் அமைந்துள்ள மூன்று கோயில்களில் இருந்த 2 சவரனுக்கும் மேலான நகைகளும், உண்டியலில் இருந்த ஆயிரக்கணக்கிலான பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.