புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோயில் தீச்சட்டி திருவிழா ட்ரோன் காட்சிகள்! - Puliyangudi amman temple festival
🎬 Watch Now: Feature Video
Published : May 1, 2024, 8:47 PM IST
தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, காப்பு கட்டி துவங்கியது. சுமார் பத்து நாட்கள் நடக்கக்கூடிய இந்த சித்திரைத் திருவிழாவில். முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது.
அதேநேரம், ஒவ்வொரு நாளும் பால்குடம், சிறப்பு அன்னதானம், அழகு குத்துதல், பூ பெட்டி எடுத்து வருதல், முத்து பெட்டி எடுத்து வருதல், அக்னிச்சட்டி ஊர்வலம் வருதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று உலக நன்மை வேண்டி 1,008 அக்னிசட்டி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, சுமார் 1,008 அக்னிச்சட்டி ஏந்தியபடி முக்கிய வீதிகளின் வழியாகச் சுற்றி, மீண்டும் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். மேலும், இந்த சித்திரைத் திருவிழாவில் புளியங்குடி மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜையின் போது முக்கிய நிகழ்வான அம்பாள் குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பவானி அம்மனிடம் குறி கேட்டுச் சென்றனர்.