நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புணர்வு! - lok sabha election 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 3, 2024, 9:05 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி உத்தரவின் பேரில் கர்ப்பிணிப் பெண்களுக்கான 'தாய்-சேய் நலச் சிறப்புப் பரிசோதனை முகாம்' நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தாய்-சேய் நலச் சிறப்புப் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்களை வைத்து '100 சதவீதம் வாக்களிப்போம்' என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குடைகள் வழங்கப்பட்டன. பின்னர், அந்த குடைகளைப் பிடித்தவாறு கர்ப்பிணிப் பெண்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில், சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர் சிவகாமசுந்தரி சிறப்பு முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்தார்.