நள்ளிரவில் நைசாக கோழி திருடிய மர்ம நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - Poultry theft CCTV footage
🎬 Watch Now: Feature Video
Published : Feb 17, 2024, 2:00 PM IST
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆரோன் டேவிட், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே கோழிப்பண்ணை அமைத்து, நாட்டுக்கோழி மற்றும் வான்கோழிகளை வளர்த்து வருகிறார். கடந்த பிப்.15 ஆம் தேதி இரவு வழக்கம்போல கோழிகளுக்கு தீவனம் வைத்து விட்டு பண்ணையின் கதவுகளை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது கோழிகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோழிப்பண்ணையில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் மர்ம நபர் ஒருவர் கையில் டார்ச் உடன் வந்து, நைசாக கோழி பண்ணைக்குள் சென்று, கையில் வைத்திருந்த சாக்குப் பையில் ஒவ்வொரு கோழியாக பிடித்து உள்ளே போட்டு, சாக்குப்பையை கயிற்றால் கட்டி, மீண்டும் அங்கிருந்து சென்றது பதிவாகி இருந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியான வழக்கறிஞர், அந்த சிசிடிவி வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கோழி திருடனை தேடி வருகின்றனர். இந்த நிலையில், அந்த நபர் கோழிப்பண்ணைக்குள் புகுந்து கோழிகளைத் திருடும் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.