"தருமபுரியில் துணை சுகாதார நிலையங்களில் பராமரிப்பு இல்லை" - எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் குற்றச்சாட்டு!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம். மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று (ஜன.24) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் பேசுகையில், “தருமபுரி மாவட்டத்தில் ஆரம்பதுணை சுகாதார நிலையங்கள் பராமரிப்பின்றி உள்ளது. கிராமப்புறத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். தூய்மையை பராமரிக்க வேண்டும்.
ஒரு சுகாதார செவிலியருக்கு இரண்டு மூன்று துணை சுகாதார நிலையங்கள் ஒதுக்கப்படுவதால் அவர்களால் எவ்வாறு பணி செய்ய முடியும். துணை சுகாதார நிலையத்திற்கு உடனடியாக செவிலியர்கள் நியமிக்க வேண்டும். ஏழ்மையான மக்களுக்கு சிகிச்சை அளிக்க தான் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சுகாதார நிலையங்கள் உள்ளது.
விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு ஒரு சிலர் தவறான வழிகாட்டுதல் செய்து தனியார் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துகிறார்கள். தருமபுரி மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருந்து வெளி செல்பவர்கள் குறிப்பிட்ட ஒரு மருத்துவமனைக்கு மட்டும் செல்கிறார்கள் இது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே அவ்வாறு தவறான வழிகாட்டுதல் செய்பவர்களை கண்காணித்து தவறுகளை களைந்து மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.