பாஜக கொடியைத் தீயிட்டுக் கொளுத்திய பாமக நிர்வாகி.. கூட்டணிக் கட்சிக்குள் நடப்பது என்ன? - pmk executive who burn BJP flag
🎬 Watch Now: Feature Video
Published : Apr 16, 2024, 3:24 PM IST
திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் களத்தில் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், பாமக நிர்வாகி ஒருவர் பாஜக கட்சிக் கொடியை எரித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் 2 வீடியோக்களைப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், "நான் புள்ளநேரி பகுதிச் சேர்ந்தவன்.பாமகவில் சுமார் 12 வருட காலமாகச் செயல்பட்டு வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.
தற்போது, பஞ்சாயத்தில் உள்ள பாமக நிர்வாகிகளைக் கலந்த ஆலோசனை செய்யாமல் பாஜகவினர் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு உள்ளது. ஆனால் பாஜகவில் ஒருவர் இருவர் தான் உள்ளனர்.
மேலும், பாஜக நிர்வாகிகள் மரியாதை எப்படிக் கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே பாஜகவினருக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக்கூறி பாஜகவினரின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்தார். பின்னர் இதுதொடர்பான வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். அதையடுத்து கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாகச் சிறிது நேரத்தில் அதன் வீடியோவை நீக்கியதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்படுவதால், கட்சிகளுக்குள் சிறிது பதற்றம் நிலவுகிறது.