இன்னைக்கு ஒரு புடி.. முடிந்தது புரட்டாசி விரதம்.. கடலூர் துறைமுகத்தில் குவிந்தன அசைவ பிரியர்கள்..!
🎬 Watch Now: Feature Video
கடலூர்: தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் பெருமாளுக்கு விரதம் இருந்து, அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். சிலர் புரட்டாசி 3வது சனிக்கிழமையில் வீடுகளில் படையலிட்டு வழிபடுவார்கள். இன்னும் சிலர் மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபட்டு தங்கள் விரதத்தை முடிப்பார்கள்.
அதன்படி புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை நேற்று (அக்.12) முடிந்ததையடுத்து, அசைவ பிரியர்கள் பலரும் இன்றே தங்கள் விரதத்தை முடித்து இறைச்சி மற்றும் மீன்கள் வாங்க கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர்.
அதில் ஒருபகுதியாக, கடலூர் துறைமுகத்தில் இன்று (அக்.13) அதிகாலை முதலே மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும் ஒரு மாதமாக அசைவம் சாப்பிடாமல் விரத வழிபாட்டில் இருந்தவர்கள், விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர்.
அந்தவகையில், வவ்வால் மீன் கிலோ 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் கிலோ 350 ரூபாய்க்கும், கனவா கிலோ 200 ரூபாய்க்கும், இறால் 250 ரூபாய்க்கும், சீலா 350 ரூபாய்க்கும், வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல கடலூர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் அதிகாலை முதலே குவிந்ததை காணமுடிந்தது.