தேனியில் முதல் போக நெல் அறுவடை பணிகள் தீவிரம்.. விவசாயிகள் மகிழ்ச்சி!
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரியகுளத்தைச் சுற்றியுள்ள தாமரைக்குளம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில், தோத்துப்பாறை அணை மூலம் பாசன வசதி பெற்று முதல் போக சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் நடவு செய்யப்பட்ட முதல் போக சாகுபடியில் நல்ல விளைச்சல் அடைந்து அறுவடைக்குத் தயாராகி உள்ளது.
முதல் போகமாக என்.எல்.ஆர், ஜெ.ஜி.எல் 1798, ஐ.ஆர் 20, நெல்லூர் 449 உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். தற்பொழுது ஜெயமங்கலம் மற்றும் தாமரைக்குளம் பகுதியில் விளைந்த நெல்லை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அறுவடை பணிகள் துவங்கிய இரண்டு தினங்களிலேயே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காலதாமதம் இன்றி விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து பெய்த பருவ மழையால் இந்த ஆண்டு ஏக்கருக்கு 30 முதல் 35 மூடை அறுவடையாகி நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்சி தெரிவிக்கின்றனர்.