மாசி மகம்; களைகட்டிய திருமானூர் ஜல்லிக்கட்டு! - திருமானூர் ஜல்லிக்கட்டு
🎬 Watch Now: Feature Video
Published : Mar 2, 2024, 5:34 PM IST
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியை அரியலூர் எம்.எல்.ஏ சின்னப்பா, அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.
அதேபோல், மாடுபிடி வீரர்களும் மருத்துவ சோதனைக்குப் பிறகே களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து, வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். பின்னர், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காமல் சீறிப் பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, டைனிங் டேபிள், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியினைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், திருமானூர் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.