தான் வடிவமைத்த பேட்டரி சைக்கிளில் பள்ளி செல்லும் சேலம் மாணவர்.. அன்பில் மகேஷ் பாராட்டு! - Anbil Mahesh Poyyamozhi
🎬 Watch Now: Feature Video
Published : Oct 3, 2024, 9:36 AM IST
சேலம்: பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் அபிஷேக் என்ற மாணவர் பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்து பள்ளிக்குச் சென்று வருகிறார். அவர் வடிவமைத்த பேட்டரி மிதிவண்டி பற்றி நேற்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மாணவர் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மாணவர் அபிஷேக்கிடம் உரையாடி, வாழ்த்து தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஆணையிட்டுள்ளார். அதன்படி, முதன்மைக் கல்வி அலுவலர் அபிஷேக் வீட்டிற்குச் சென்று தொலைபேசி வழியாக அமைச்சரிடம் உரையாட வைத்துள்ளனர்.
அப்போது மாணவரிடம், “உங்களது கண்டுபிடிப்பு பெருமையாக இருக்கிறது. அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் நீங்கள் முன்மாதிரியாக திகழ்கிறீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக உங்களுக்கு தோன்றும் ஆலோசனைகள் தெரிவித்தால் அதை நடைமுறை செய்யலாம்" என்று வாழ்த்தியுள்ளார்.