மாதனூர் கெங்கையம்மன் சிரசு திருவிழா.. பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. - Kengaiyamman Sirasu Festival - KENGAIYAMMAN SIRASU FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Jul 1, 2024, 8:53 AM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கெங்கையம்மன் கோயிலின் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் 28ஆம் தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தல், பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தல் போன்ற நிகழ்ச்சிகளோடு இத்திருவிழா தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக, நேற்றைய முன்தினம் (ஜூன் 30) காளியம்மன் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 30) பாலாற்றங்கரையி இருந்து அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு வானவேடிக்கை முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டு அம்மனுக்கு கண் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருமாங்கல்ய நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது, பெண் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு 'கோவிந்தா கோவிந்தா' என கோஷமிட்டு சாமிதரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு ஆளுயர மாலை அணிவித்து தரிசனம் செய்தனர். இந்த விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திர, கர்நாடக போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.