அரோகரா.. திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 2, 2024, 2:57 PM IST
தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு கந்த சஷ்டி விழா, ஆவணித் திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த கந்த சஷ்டி விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும், திருச்செந்தூருக்கு வருகை தந்து ஆறு நாட்கள் விரதம் இருப்பார்கள். இத்தகைய கந்த சஷ்டி விழாவானது இன்று (நவ.02) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இதற்காக அதிகாலை ஒரு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. காலை 5:30 மணிக்கு கோயில் பிரகாரத்தில் உள்ள யாகசாலையில் ஜெயந்திநாதர் எழுந்தருளினார்.
முன்னதாக, அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை உடை அணிந்து, தங்களது சஷ்டி விரதத்தை தொடங்கினர். ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம், வருகிற 7ஆம் தேதி கோயில் முன்புள்ள கடற்கரையில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.