மோடியின் முகமுடி அணிந்து வடை விநியோகம் செய்த திமுகவினர்.. ஈரோட்டில் நூதன பிரசாரம்! - திமுக பொதுக்கூட்டம்
🎬 Watch Now: Feature Video


Published : Mar 5, 2024, 10:32 AM IST
ஈரோடு: சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திப்புசுல்தான் மைதானத்தில், 'எல்லோருக்கும் எல்லாம்' மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பிரதிநிதிகள், ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக் குழு தலைவர்கள் பலர் பங்கேற்றுப் பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து கலை இலக்கிய மாநிலச் செயலாளர் உமாபதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது தகவல் தொழில்நுட்ப அணி (DMK IT Wing) சார்பில், கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினருக்கு 'இது மோடி சுட்ட வடை' என்ற பிரசுரமும், வடையும் வழங்கப்பட்டது.
சில தொண்டர்கள் மோடி முகமூடி அணிந்து கட்சியினருக்கு வடை வழங்கினார். தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்காமல், வழங்கியது போல பேசும் பிரதமர் மோடியைக் கண்டித்து 'வாயில வடை' என்ற தலைமையில் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம், "நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவை விட திமுக அதிக வாக்குகள் வாங்கும். குறைந்த வாக்குகள் வாங்கினால் நான் மாவட்டச் செயலாளர் பதவியையும், அரசியலை விட்டு விலகத் தயார். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விலகத் தயாரா?" எனப் பொதுக்கூட்டத்தில் சவால் விட்டார்.