வால்பாறை பகுதியில் கூட்டமாக வலம்வரும் யானைகள்.. ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் பொதுமக்கள்! - Tamil Nadu Forest Department
🎬 Watch Now: Feature Video
Published : Feb 28, 2024, 8:03 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் தங்களது குட்டிகளுடன் சாலையைக் கடந்ததால், அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக யானைகளின் வரவு அதிகமாக உள்ளது. மேலும், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் துவங்கி, மார்ச் மாதம் வரை வால்பாறை பகுதிக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட யானைகள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு குட்டிகளுடன் அதிக அளவில் யானைக் கூட்டங்கள் வந்து செல்கிறது. தற்போது இந்த யானைக் கூட்டத்தில், பிறந்து 20 நாட்களேயான யானைக்குட்டி புதிய வரவாக வந்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வமாகக் காண்பதற்காகவே அதன் அருகாமையில் செல்கின்றனர் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும், குட்டியைப் பாதுகாக்கும் வகையில், யானைக் கூட்டங்கள் ஆங்காங்கே முகாமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போட்டோ மற்றும் செல்பி எடுப்பதற்காக யானையின் அருகாமையில் செல்வதால், யானை அவர்களைத் தாக்க முற்படும் நிலை உள்ளது.
இதனை வனத்துறை நிர்வாகம் அப்பகுதியில் உள்ள காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வருகைதரா வண்ணம் பாதுகாத்து, அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்ட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.