குன்னூரில் ஓணம் பண்டிகை கோலாகலம்.. பாரம்பரிய உடையில் நடனமாடி மகிழ்ந்த கல்லூரி மாணவிகள்! - Onam Celebration
Published : Sep 7, 2024, 11:40 AM IST
நீலகிரி: கேரள மாநிலத்தில் பாரம்பரிய பண்டிகை மற்றும் முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. இதை மலையாளிகள் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், கேரளா மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் படிப்பதற்கு, வேலைக்கு எனச் சென்றுள்ள மலையாளிகள் தற்போதே ஓணத்தைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் இயங்கி வரும் பிராவிடன்ஸ் என்ற தனியார் கல்லூரி கேரள மாநிலத்தை ஒட்டி உள்ளதால், அங்கு அதிக அளவில் மலையாள மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது, வரும் 15ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவுள்ளனர்.
இந்த நிலையில், கல்லூரியில் முன்கூட்டியே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில், மாணவிகள் அனைவரும் மேளதாளங்களுடன் கேரளா பாரம்பரிய உடைகள் அணிந்து, கல்லூரியின் வாசலில் அத்திப்பூ கோலமிட்டு, கேரளா பாரம்பரிய நடனங்கள் ஆடி ஓணம் பண்டிகையைத் தெறிக்கவிட்டனர். ஆண்டுதோறும் இக்கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டும் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்தனர்.