முன்னாள் மாணவர் சந்திப்பிற்கு 90s சீருடையில் வந்த மாணவர்! - coimbatore district news
🎬 Watch Now: Feature Video


Published : Feb 3, 2024, 5:18 PM IST
கோயம்புத்தூர்: கோவை வின்சென்ட் ரோடு கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ளது, நல்லாயன் உயர்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 1980ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, போத்தனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று (பிப்.03) நடைபெற்றது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக படித்த மாணவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்த நிலையில், பள்ளி காலத்தில் நடைபெற்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 1990ஆம் ஆண்டு இந்த பள்ளியில் படித்த கார்த்தி என்ற கூடலூரைச் சேர்ந்த மாணவர், கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக, அன்றைய காலகட்ட பள்ளிச் சீருடையான காக்கி அரைக்கால் டவுசர் மற்றும் வெள்ளை நிறச் சட்டை ஆகியவற்றை அணிந்து பள்ளிக்கு வருவது போலவே, நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து மேடையில் அமர்ந்த நிகழ்வு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வெகுவாக பாராட்டினார். இது போன்று மாணவர்கள் அனைவரும் அரசு நிர்வாகத்தோடு இணைந்து பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டு, வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் பிளமின் மரிய ஜோசப் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.