thumbnail

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து கலகல பிரச்சாரம்! - Actor Singamuthu criticized dmk

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 9:33 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார், வாணரமுட்டி, இனாம் மணியாச்சி பேருந்து நிலையம் சந்திப்பு பகுதியில், அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, திரைப்பட நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, இன்று (ஏப்.04) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரத்தின் போது திரைப்பட நடிகர் சிங்கமுத்து பேசுகையில், “அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சராகலாம், உண்மையான தொண்டர்கள் உண்மையாக உழைக்கக் கூடியவர்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சராகலாம். தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது உண்ண உணவில்லாமல், உடையில்லாமல் இருந்த மக்களுக்காக முதல் ஆளாக வந்து உதவி செய்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டுச் சென்றார். தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு பொய் சொன்னாலும் நம்புராங்க. எவ்வளவு அடிச்சாலும் தாங்குராங்க என நினைக்கிறார்”, என பேசினார். 

பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், “திமுக எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சி செய்கிறதோ, அப்போதெல்லாம் குடும்ப ஆட்சி தான் நடைபெறும், தமிழக மக்கள் வேதனையைச் சந்திப்பார்கள். இப்போது கூட தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. 

திமுக நிர்வாகிகள் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர், தமிழகத்தில் ஐந்து வயதுக் குழந்தை கூட வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அதிமுக ஆட்சியில், போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட்டு சட்ட ஒழுங்கு சீராக இருந்தது. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது, தற்போது மாறி உள்ளது. 

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை, மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்ப பெண்களுக்கும் உண்டு எனக் கூறிவிட்டு தற்போது தகுதி உள்ள பெண்களுக்குத் தான் என கூறுகின்றனர்”, என விமர்சித்துள்ளார்.  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.