தஞ்சையில் இருந்து மலேசியா முருகன் கோயிலுக்கு பறக்கவிருக்கும் 70 அடி உயர வேல்..!
Published : 11 hours ago
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் விக்னேஷ் (34) இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சுவாமிநாதன் கலைக்கூடம் என்ற பெயரில் சுவாமி சிலைகள், பித்தளை குத்துவிளக்குகள், கோயில் மணிகள் போன்றவற்றை தயார் செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த ஆண்டு, மலேசியா நாட்டில் உள்ள கிளாங் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு, பிரமாண்டமான முறையில் செம்பு உலோக தகட்டினாலன 70 அடி உயர வேல் செய்து தர ஆடர் கிடைத்துள்ளது.
கடற்கரையோர கோயில் என்பதால், அந்த பிரமாண்டமான வேலை கடற்காற்று எளிதில் அரித்து விடக்கூடாது என்பதற்காக, செப்பு உலோக தகட்டின் மீது பளபளக்கும் தங்க நிற வர்ணம் தீட்டப்பட்டு, இந்த வேலின் மேல்பாகம் மட்டும் தற்போது 175 கிலோ எடையில் 15 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த வேல் விமானம் மூலம் 7 தனித்தனி பாகங்களாக பிரிக்கப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அங்கு சென்ற பிறகு, எஞ்சிய 55 அடி உயரத்திற்கு செப்பு தகட்டினால் பைப் போன்ற பாகம் உருவாக்கப்பட்டு அதன் மீது தற்போது தயார் செய்யப்பட்டுள்ள மேல் பாகம் பொருத்தப்படவுள்ளது.
இதுமட்டும் அல்லாது, மலேசிய நாட்டில் கிளாங் கடற்கரை பகுதியில் உள்ள இந்த முருகன் கோயிலுக்கு வருகிற 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.