யமுனா நதி இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். கங்கா நதியின் கிளை நதியாக இருக்கும் இந்நதி உத்தராகண்டில் உள்ள யமுனோத்தரி பனிக்குன்றிலிருந்து தோன்றி ஏழு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இதன் நீர் தூய்மையானதாக, மக்கள் வழிபட்டு செல்லும் அளவிற்கு சுத்தமாக இருந்தது.
ஆனால், இன்றைய நிலையோ மொத்தமாக மாறியிருக்கிறது. குறிப்பாக டெல்லியின் கிழக்குப் பகுதியை கடக்கும்போது, யமுனா நதி உலகிலேயே மிகவும் மாசுபட்ட ஆறாக, நுரை ததும்பி காட்சியளிக்கிறது. டெல்லி நகரத்தின் சுமார் 58% கழிவுகள் இந்த ஆற்றில் கலப்பதும், வழிபாட்டு முறைகளினால் ஏற்படும் நீர் மாசுபாடும் தான் நதி தனது தன்மையை இழந்ததற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
நச்சு நுரை எப்படி உருவாகிறது?
யமுனாவில் காணப்படும் நுரை, ஆறு நச்சுப் பொருள்களால் மாசுபட்டதன் வெளிப்பாடு ஆகும். இந்த நுரையை உருவாக்கும் முக்கிய காரணங்களைக் கீழ்வருமாறுக் காணலாம்.
தொழிற்சாலைக் கழிவுகள்: டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளில் இணைக்கப்படாத தொழிற்சாலைகள், அல்லது மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வரும் சுத்தமில்லாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கின்றன. கூடுதலாக, சிறு தொழிற்சாலைகளும் தங்கள் கழிவுகளை நேரடியாக ஆற்றில் வெளியிடுகின்றன. இந்தப் கழிவுகளில் இருக்கும் சோப்பு நுரைக்கு உகந்த ரசாயனங்கள், ஆற்றில் நுரையை ஏற்படுத்துகின்றன.
சோப்புகள்: பெரும்பாலான வீடுகளில் தற்போது பயன்படுத்தும் சோப்புகள் அதிக ரசாயன கலவைகளால் ஆனவை. உலோகங்கள், பாஸ்பேட் போன்ற பல வேதிப் பொருள்களின் உதவியுடன் தான் பெரு நிறுவன சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இந்த சோப்பு நீர்க் கழிவுகள் ஆறுகளில் கலக்கும் போது நச்சு நுரை உருவாகிறது. நீரில் இருக்கும் சுழற்சி, காற்றினால் ஏற்படும் அலைகள் இதை இன்னும் அதிக நுரை ததும்பும் நச்சுகளாக மாற்றுகின்றன. நாம் உடலில் நீருடன் சேர்த்து சோப்பை தேய்க்க தேய்க்க அதிக நுரை வருகிறது அல்லவா; அதே போல் தான் ஆற்றுநீர் படுகையில் நிகழ்கிறது.
கார்பனின் பங்கு: நுரை உருவாக்கம் என்பது பல நீர்நிலைகளில் இயற்கையான நிகழ்வாகும். இது பாசி மற்றும் தாவர குப்பைகள் போன்ற கார்பன் பொருள்களின் சிதைவாலும் உருவாகலாம். யமுனாவைப் பொருத்தவரை, கழிவுநீரில் இருந்து வரும் கழிவுகள் இந்த இயற்கையான செயல்முறையை பெருக்கி, நுரையின் அதிக அடர்த்திக்கு பங்களிக்கிறது.
அதிகளவு நுரையில் உள்ள கேடுகள்:
நாம் இப்படி பரவசமாய் காணும் நுரையில் அமோனியா, பாஸ்பேட்டு போன்ற வேதிப்பொருள்கள் அதிகளவில் இருக்கின்றன. இவை சுவாச பிரச்சினைகள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கக் கூடும். இது ஒருபுறம் இருக்க, பல மக்களும், பக்தர்களும் யமுனா ஆற்றில் நீராடுவதையும், தீப ஒளி பூஜைகளில் பங்கேற்பதையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் மாசுபட்ட நீர் மக்கள் உடல் நலத்திற்கு ஆபத்தை உருவாக்குகின்றது.
இதையும் படிங்க |
தொழில்நுட்ப தீர்வுகள்:
யமுனாவின் நுரையைத் தடுக்க தொழில்நுட்ப நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அவற்றை கீழ்வருமாறு காண்போம்.
நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம்: தொழில்நுட்ப கண்காணிப்பு சார்ந்த நீர் சுத்திகரிப்பு கருவிகள், உயர் நுண்ணுயிரி சுத்திகரிப்பு முறைகள் ஆகியன இந்த கடுமையான மாசுபாட்டை கையாள முடியும். இது நுரையை உருவாக்கும் நச்சுப் பொருள்களை கண்டறிந்து தடுக்க உதவும்.
சென்சார்கள்: நவீன சென்சார் தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஆற்றின் மாசுபாட்டை நேரடியாக கண்காணிக்க உதவும். இதன் வாயிலாக, உடனடி நடவடிக்கைகள் எடுக்கவும், தீர்வுகளை திட்டமிடவும் முடியும்.
தொழிற்சாலைகள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள்: தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டை மீறும்போது, செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தி அவற்றைக் கண்காணிக்க முடியும்.
இதன் வாயிலாக, நவீன தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி, யமுனா ஆற்றின் சுகாதாரத்தை மீட்டெடுக்க இந்திய அரசு மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.