பண்டிகை காலத்தை முன்னிட்டு கிராமப்புறங்களில் ஏற்பட்ட அதிகமான தேவையால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் 9 விழுக்காடு வளர்ச்சி கண்டு, சுமார் 4 கோடியே 70 லட்சம் (47.1 மில்லியன் யூனிட்கள்) ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை முகவர்கள், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் என அனைவரும் பண்டிகைக் காலத்திற்கு தேவையான ஸ்மார்ட்போன்களை இருப்பு வைத்திருந்து, விற்பனையை மேற்கொண்டதாக கேனலிஸ் (Canalys) என்ற சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
"முன்னணி பிராண்டுகள் பண்டிகை விற்பனைக்காக, தங்கள் நடுத்தர முதல் பிரீமியம் போன்களின் இருப்பை விநியோகம் செய்து, சலுகைகளை அறிவித்தது. இதற்கிடையில், ஆப்பிள் ஐபோன் 15ச் (iPhone 15) சந்தையில் நல்ல விற்பனையை பதிவு செய்தது. அதன் புதிய ஐபோன் 16 அறிமுகத்திற்கு முன்னதாக ஐபோன் 15 மாடலுக்கான தேவை அதிகரித்தது," என பகுப்பாய்வாளர் சன்யம் சௌராசியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பிற பிராண்டுகளான மோட்டோரோலா, கூகுள், நத்திங் போன்றவை, தங்கள் தனித்துவமான வடிவமைப்பு, சுத்தமான இயங்குதளம் மற்றும் விற்பனை முகவர்களின் விரிவாக்கம் ஆகியவற்றால் தங்கள் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனையை அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க |
இந்த சூழலில் விவோ (Vivo) பல்வேறு விற்பனை தளங்கள் வாயிலாக வேகமான வளர்ச்சியைக் கண்டு சந்தையில் 19 விழுக்காடு இடத்தைப் பிடித்தது. விவோ தரப்பில் இருந்து மொத்தம் 91 லட்ச ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
சீனாவின் பெருநிறுவனமான சியோமி 7.8 மில்லியன் யூனிட்களை விநியோகித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இது அதன் குறைந்த விலை 5ஜி போன்களால் சாத்தியப்பட்டது.
சாம்சங், 7.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விநியோகம் செய்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையே அடுத்தடுத்த இடங்களை ஒப்போ, ரியல்மி ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.