‘கூகுள்’ பெயர் உலகளவில் பிரபலமாக முக்கியக் காரணமே, அவர்களது தேடுபொறி (Search engine) தான் என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. ஆனால், இவர்களுக்குப் போட்டியாக செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கு பெயர்பெற்ற OpenAI (ஓபன்-ஏஐ) நிறுவனம், புதிய சாட்ஜிபிடி தேடுபொறியை (ChatGPT search engine) அறிமுகம் செய்துள்ளது.
சான்பிராசிஸ்கோவைத் தலையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் OpenAI நிறுவனம், தற்போது இந்த தேடுபொறியை சாட்ஜிபிடி பிரீமியம் பயனர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக வழங்கியுள்ளது. ஆனால், விரைவில் இது அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜூலை மாதத்தில், இதன் சோதனைப் பதிப்பு ஒரு சிறு குழுவிற்கு மட்டும் வழங்கப்பட்டு, வெளியீட்டிற்கான முதற்கட்ட சோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ChatGPT-இன் வரலாறு
🌐 Introducing ChatGPT search 🌐
— OpenAI (@OpenAI) October 31, 2024
ChatGPT can now search the web in a much better way than before so you get fast, timely answers with links to relevant web sources.https://t.co/7yilNgqH9T pic.twitter.com/z8mJWS8J9c
ChatGPT, முதன்முதலில் 2022-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு இணையதளங்களில் இருந்து பரந்த அளவிலான ஆவணங்களைக் கொண்டு தன்னை மெருகேற்றிக்கொண்ட ChatGPT, தற்போதைய நிகழ்வுகள் குறித்த தகவல்களை வழங்க முடியாது என்ற கட்டுப்பாட்டுடன் செயல்பட்டது.
மே 2023-இல், கூகுள் தனது தேடுபொறியின் உள்கட்டமைப்பில் மாற்றம் செய்து, AI-ஆல் உருவாக்கப்பட்ட சுருக்கங்களை தேடல் முடிவுகளின் மேல்பகுதியில் காண்பிக்கத் தொடங்கியது. இந்த நவீன மாற்றம் பயனர்களுக்கு தேடல் முடிவுகளை விரைவாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, இணைப்புகளைக் கிளிக் செய்து பிற தளங்களுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை குறைக்கின்றது.
எனினும், கூகுளின் இந்த மாற்றம் ஆரம்ப கட்ட சோதனைகளில் சில நேரங்களில் தவறானத் தகவல்களை (AI "ஹாலுசினேஷன்" எனப்படும்) வெளியிட்டது. இதனால் தகவல் ஆதாரங்களுக்கான சோதனை வசதிகள் இன்னும் அதிகரிக்க வேண்டிய சூழலில் உள்ளன.
செய்தித் துறைக்கு ஏற்படும் சவால்கள்:
செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் தற்போது செய்திகளைத் தொகுத்து வழங்கும் முயற்சிகளை மேற்கொள்வது, ஊடக நிறுவனங்களிடையே கவலைக்குரியதாக மாறியுள்ளது. இதனிடையே, நியூயார்க் டைம்ஸ், OpenAI மற்றும் அதன் தொழில்நுட்ப கூட்டாளியான மைக்ரோசாப்ட் (Microsoft) மீது காப்புரிமை மீறல் வழக்குகளை தொடர்ந்துள்ளது.
அதேபோல, வால் ஸ்டிரீட் ஜெர்னல் (Wall Street Journal), நியூயார்க் போஸ்ட் (New York Post) மற்றொரு AI தேடுபொறியான பெர்ப்லெக்ஸிட்டி (Perplexity) மீது அன்றே வழக்கு தொடர்ந்தது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க |
புதிய தேடல் சேவையின் அம்சங்கள்:
OpenAI தனது புதிய தேடுபொறியை நம்பகமான செய்தித் தளங்களின் ஆதரவில் உருவாக்கி வருகிறது. இதில், ‘தி அசோசியேட்டட் பிரஸ்,’ (The Associated Press - AP), நியூஸ் கார்ப் (News Corp) போன்ற செய்தி ஊடக நிறுவனங்களின் தரவுகளை பயன்படுத்தும் ஒப்பந்தங்கள் உள்ளடங்கியுள்ளன. மேலும், தேடல் முடிவுகளில் பயன்படக்கூடிய இணைப்புகளைக் (கிளிக் செய்ய தகுதியான லிங்குகள்) காட்சிப்படுத்தி, கூடுதல் தகவல்களுக்காக அதன் மூலத்தளங்களை அணுகும் வசதிகளும் இதனில் சேர்க்கப்பட்டுள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
‘தி அசோசியேட்டட் பிரஸ்’ மற்றும் OpenAI இடையிலான ஒப்பந்தத்தின் படி, செய்தி நிறுவனத்தின் முந்தைய தகவல் தொகுப்புகளை OpenAI அணுகும்படியான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் OpenAI-க்கு தகவல் அடிப்படையிலான சேவைகளை செறிவுடன் வழங்குவதற்கான அடித்தளமாக கருதப்படுகிறது.
இந்த நேரத்தில் செயற்கை நுண்ணறிவில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் வல்லுநர்கள், இம்மாற்றம் கூகுளின் தேடுபொறி ஆதிக்கத்துக்குப் பெரிய சவாலாக அமையும் என்றும், அதேசமயம் செய்தித் துறைக்கு மறைமுகமான ஆபத்துகளை உருவாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
OpenAI-இன் புதிய தேடுபொறி வாயிலாக, AI மற்றும் தகவல் தேடலின் எதிர்காலம் எவ்விதத்தில் மாறப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.