கலிபோர்னியா: ஐபோன் (iPhone), ஐபேடு (iPad) மற்றும் மேக் (Mac) உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சில அம்சங்களைக் கொண்டுவர, செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன் ஏஐ (open AI) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டிம் குக் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, உலக பணக்காரர்களுள் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் ஓப்பன் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்தால், ஐபோன்களுக்கு தனது அலுவலகத்தில் தடை விதிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “ஆப்பிள் நிறுவனம் எனது ஓஎஸ்- களில் (OS) ஓப்பன் ஏஐ-ஐஇணைத்தால், எனது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல். மேலும், எனது நிறுவனங்களுக்கு வருபவர்களிடம் ஆப்பிள் சாதனங்கள் இருக்கிறதா என சோதிக்கப்படும். அவர்களிடம் ஆப்பிள் சாதனங்கள் இருக்கும் பட்சத்தில், வாசலில் இருக்கும் கூண்டில் வைத்துவிட்டு வர வேண்டியிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு தொடர்பாக ஆப்பிள் நிறுவனமோ, ஓப்பன் ஏஐ நிறுவனமோ இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க: இந்தியாவில் தலைவிரித்தாடும் ஃபெடெக்ஸ் கூரியர் மோசடி.. சைபர் குற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? - FedEx Courier Fraud