எலான் மஸ்க் ட்விட்டரை கையிலெடுத்து, அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றியதில் இருந்தே அனைத்தும் பரபரப்பான முடிவுகள் தான். அந்த வகையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தேவையில்லாத ஒருவரின் கணக்கை நாம் முடக்கினால் கூட, அவர்கள் நம் பொதுப்பதிவுகளை பார்க்க முடியும் வகையில் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பதிவாக இருந்தாலும், அந்த பதிவை லைக் செய்யவோ அல்லது கமெண்ட் பதிவிடவோ முடியாது என்பது இதில் சிறப்பு.
புதிய மேம்பாட்டின் படி, நீங்கள் பிளாக் செய்தவர்கள் இனி உங்கள் பொது பதிவுகளை பார்க்க முடியும். ஆனால் உங்கள் பாதுகாக்கப்பட்ட (ப்ரொடெக்டட்) பதிவுகள் மட்டும் பிளாக் செய்யப்பட்டவர்களிடம் இருந்து மறைக்கப்படும்; ஏனெனில் இவ்வகை பதிவுகள் உங்களை பின்தொடரும் பயனர்களுக்கே மட்டும் காண முடியும்.
முக்கியமாக, பிளாக் செய்யப்பட்ட பயனர்கள் இன்னும் சில செயல்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நம்மைப் பின்தொடர முடியாது, நேரடி செய்தி அனுப்ப முடியாது, நம் கணக்கை லிஸ்டில் சேர்க்க முடியாது, புகைப்படங்களில் நம்மை டேக் (tag) செய்ய முடியாது. மேலும், உங்கள் பதிவுகளுக்கு லைக், கமென்ட், ரீபோஸ்ட் செய்யவும் அனுமதி இல்லை.
மேலும், நாம் பிளாக் செய்துள்ள கணக்குகளில் இருந்து புதிய அறிவிப்புகளை பெறமாட்டோம். அதுமட்டுமில்லாமல், அவர்கள் குறிப்பிடும் உரையாடல்களில் நம்மை மென்ஷன் செய்தாலும் நோட்டிஃபிக்கேஷன் கிடைக்காது. ஆனால் நாம் பின்தொடரும் கணக்குகளில் உள்ளவர்கள் நம்மை மென்ஷன் செய்தால் மட்டும், பிளாக் செய்த கணக்குகள் தொடங்கிய உரையாடல்களில் குறிப்பிட்டால் அறிவிப்புகள் வரும் என எக்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க |
ஒரு எக்ஸ் கணக்கை பிளாக் செய்வதால், நாம் அவர்களை ஃபாலோ செய்வதையும், அவர்கள் நம்மைப் பின்தொடர்வையும் எக்ஸ் தளம் நிறுத்திவிடும். மீண்டும் அக்கணக்கை பின்தொடர விரும்பினால், பிளாக்கை நாம் நீக்க வேண்டும். பிளாக் செய்த கணக்குகளுக்கு, ‘நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள்’ என எந்த அறிவிப்பும் அனுப்பப்படாது. ஆனால் அவர்கள் கணக்கில் இருந்து உங்கள் ப்ரொஃபைலைத் தேடும்போது, பிளாக் செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
எக்ஸ் தளம் மேற்கொண்டுள்ள மாறுதலின் காரணமாக நாம் பிளாக் செய்த கணக்குகளின் பதிவுகள் சில நேரங்களில் திடீரென டைம்லைனில் தோன்றலாம். குறிப்பாக, நாம் பின்தொடரும் பயனர்கள் பிளாக் செய்த கணக்குகளை குறிப்பிட்டால், அல்லது நம்மையும் பிளாக் செய்தவரையும் ஒரே உரையாடலில் சேர்த்தால் இவ்வாறான பதிவுகளை நம் டைம்லைனில் பார்க்க முடியும்.
பிளாக்கிங் மாற்றத்தின் பின்னணி:
எலான் மஸ்க் மற்றும் எக்ஸ் குழு இந்த மாற்றத்தை பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதுகின்றனர். ஆனால், இதற்கெதிராகப் பல பயனர்கள் குரல் எழுப்பியுள்ளனர். ஏனெனில் பிளாக்கிங் முறையைப் பழையபடி விட்டு, தேவையற்ற தொடர்புகளை முற்றிலும் அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
எக்ஸ் தளத்தில் எவ்வாறு ஒருவரை பிளாக் செய்வது?
ஒருவரை பிளாக் செய்ய கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- முதலில் அவர்களின் ப்ரொஃபைல் பக்கத்திற்குச் செல்லவும்.
- அங்கே உள்ள மேலும் (More) பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- பின்னர், பிளாக் விருப்பத்தைத் தேர்வு செய்து உறுதிசெய்யவும்.
அதேபோல், நீங்கள் பார்க்கும் பதிவில் ஒருவரை பிளாக் செய்ய, அந்த பதிவின் மேல் உள்ள ஐகானில் கிளிக் செய்து, பிளாக் விருப்பத்தை தேர்வு செய்து அந்த கணக்கை தவிர்க்கலாம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.