ஆப்பிள் நிறுவனம் தங்களின் சமீபத்திய ஐபோன் 16 வெளியீட்டைத் தொடர்ந்து, தற்போது புதிய ஐமேக் (iMac) கணினியை M4 சிப், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) செயற்கை நுண்ணறிவு திறன் ஆகியவற்றுடன் அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் பல வண்ண நிறக் கலவையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய M1 சிப்பை விடவும், புதிய M4 சிப் 1.7x வரை கூடுதலான திறனைக் கொண்டதாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. எனினும் M3 உடன் புதிய சிப் எப்படி போட்டியிடுகிறது என்பதை ஆப்பிள் விளக்கவில்லை.
புதிய M4 ஆப்பிள் சிலிகான் சிப் அடிப்படையில் 16ஜிபி ரேம் உடன் வெளியாகும் நிலையில், இதை 32ஜிபி வரை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது நிறுவனம். மேலும் இன்டெல் கோர் 7 புராசஸர் (Intel Core 7 processor) உடன் ஒப்பிடும்போது, 4.5x வேகமானதாக M4 சிப் இருக்கும் என்பதை தனது அறிக்கையில் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
மேக் கணினியில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்
இதில் macOS Sequoia 15.1 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (AI) அம்சமான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் திறனுக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் சிரியுடன் (Apple Siri) சாட்ஜிபிடி (ChatGPT) இணைக்கப்படும் என நிறுவனம் கூறியிருக்கிறது. இதன் வாயிலாக, பயனர்கள் தங்கள் வேலைகளை எளிதில் முடிக்கும் பல சேவைகளை பெறுவார்கள் என்கிறது நிறுவனம்.
தைவானின் TSMC நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட M4 சிப்பில், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பயன்பாட்டிற்காக, 16 கோர் அடிப்படையிலான நியூரல் எஞ்சின் இணைக்கப்பட்டுள்ளது. இது, வேகமாக பதிலளிக்கும் திறனை ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பயன்பாட்டிற்கு வழங்கும் என நிறுவனம் கூறியிருக்கிறது.
24-அங்குல iMac M4 மாடலின் இந்திய விலை என்ன?
புதிய 24-அங்குல (இன்ச்) iMac M4 அடிப்படை மாடல் விலை ரூ.1,34,900 முதல் தொடங்குகிறது. மேம்பட்ட டாப் மாடல் விலை ரூ.1,94,900 வரை இருக்கிறது.
24” ஐமேக் M4 மாடல் | விலை |
8-கோர் CPU, 8-core GPU, 16ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் | ரூ.1,34,900 |
10-கோர் CPU, 10-core GPU, 16ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் | ரூ.1,54,900 |
10-கோர் CPU, 10-core GPU, 16ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் | ரூ.1,74,900 |
10-கோர் CPU, 10-core GPU, 24ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் | ரூ.1,94,900 |
இதையும் படிங்க |
முக்கியமாக இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மேஜிக் மவுஸ் விலை ரூ.9,500 ஆகவும், மேஜிக் டிராக்பேட் விலை ரூ.14,500 ஆகவும், டச் ஐடியுடன் கூடிய மேஜிக் கீபோர்டின் விலை ரூ.19,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய iMac M4 அம்சங்கள்:
- 24-அங்குல 4.5K ரெட்டினா திரை (Retina display)
- 500 நிட்ஸ் பிரைட்னஸ்
- முன்பக்கம் 1080 பிக்சல் திறன்கொண்ட செண்டர் ஸ்டேஜ் கேமரா, வீடியோ பதிவு அம்சத்துடன்
- 10-கோர் CPU + 10-கோர் (கணினி இயக்கம்) GPU (கிராபிக்ஸ் இயக்கம்) வரை ஆதரிக்கும் 3nm (நானோமீட்டர்) M4 புராசஸர்
- வைஃபை 6E
- ப்ளூடூத் 5.3
- தண்டர்போல்ட் 4 (Thunderbolt 4)/ யூஎஸ்பி 4 (USB 4), டைப் சி போன்ற இணைக்கும் போர்ட்டுகள்
- டால்பி அட்மாஸ், ஸ்பேஷியல் ஆடியோ வழங்கும் 6 ஸ்பீக்கர்கள்
- மூன்று மைக்ரோ-ஃபோன்கள்
- மேஜிக் மவுஸ், மேஜிக் கீபோர்டு, மேஜிக் டிராக்பேட் இணைப்பு ஆதரவு
அனைத்து புதிய ஆப்பிள் ஐமேக் எம்4 மாடல்களும் நீலம், பச்சை, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளி மற்றும் மஞ்சள் வண்ண விருப்பங்களில் வருகின்றன. முன்பதிவு இப்போது தொடங்கியிருக்கும் நிலையில், நவம்பர் 8ஆம் தேதி முதல் புதிய மேக் விற்பனைக்கு வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.