கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிவானந்தா காலனி வள்ளலார் தெருவில் சிறுநீர் கழிப்பவர்கள் மற்றும் குப்பைகளை வீசி செல்பவர்களை கண்டிக்கும் விதமாக செருப்பு மற்றும் துடைப்பத்தை தோரணமாக கட்டி தொங்கவிட்டு ஊர்மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் நூறு வார்டுகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தூய்மை பணியாளர்கள் நேரடியாக சென்று குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் சமீபத்தில் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது எனவும், நேரடியாக வரும் தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே குப்பைகளை வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனாலும், அதை மீறியும் ஒரு சில பகுதிகளில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சிவானந்தா காலனியில் உள்ள வள்ளலார் தெருவில் குப்பைகளை கொட்டுவது மற்றும் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்கும் விதமாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நீளமான கயிற்றில் செருப்புகளையும் துடைப்பங்களையும் தோரணமாக கட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரிசி மூட்டைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம்.. தெரியாமல் விற்ற மச்சான் - கடலூரில் பரபரப்பு!
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வருண் என்ற இளைஞர் கூறுகையில், "பலமுறை எச்சரிக்கை விடுத்தும் யாரும் கேட்பதில்லை. மேலும், இதனால் நோய் தொற்று அபாயம், துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள வீடுகளின் ஜன்னல்களைக் கூட திறந்து வைக்க முடியவில்லை.
மேலும், இதுகுறித்து மாநகரச்சியி நிர்வாகத்திடமும், அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்களும் வாய்மொழியாக சொல்லி சொல்லி பார்த்தும் யாரும் கேட்கவில்லை. இரவு நேரங்களில் வந்து குப்பைகளை வீசி செல்கின்றனர்.
ஆகவே, இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து இது போன்று, செருப்பு மற்றும் துடைப்பத்தை தோரணமாக கயிற்றில் கட்டி தொங்கவிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு மேல் எங்களால் என்ன செய்ய முடியும் என தெரியவில்லை மக்களாக திருந்தாவிட்டால் ஏதும் செய்ய முடியாது" என வருத்தம் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்