தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒல்லிக்குச்சி என்ற ஒண்டி. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு சின்னமனூர் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்த இவரை வழக்கு விசாரணைக்காக, தேனி மாவட்ட போலீசார் 4 பேர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்துவதற்காக, நீதிமன்ற வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறையில் இருந்துள்ளனர்.
அப்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒண்டியின் உறவினரான தனுஷ்கோடி என்ற இளைஞர், அவர் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை ஒண்டியிடம் கொடுத்துள்ளார். அப்போது பாதுகாப்பிற்காக வந்திருந்த ஆயுதப்படை போலீசார், அதனைக் கண்டு கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில், அவருடன் வந்திருந்த மற்றொரு இளைஞரையும் சோதனை செய்தபோது, அவரிடமும் கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது அவர்கள் இருவரிடமிருந்தும் சுமார் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து, நீதிமன்றத்திற்குள் கொலை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு கஞ்சா வழங்க முற்பட்டபோது, பிடிபட்ட இரு இளைஞரையும் ஆயுதப்படை போலீசார் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.