நாமக்கல்: நாமக்கல்லில் வெப்படை அருகே வலி நிவாரண மாத்திரைகளை போதை ஊசியாக பயன்படுத்திய 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே உள்ள சாமுண்டூர் மயான முட்புதற்களில், சில போதை மாத்திரைகளும், ஒருமுறை பயன்படுத்தும் ஊசிகளும் இருப்பதாக வெப்படை தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இரவு நேரங்களில் அங்கு திரண்டு, வலி மாத்திரைகளை போதை ஊசிகளாக பயன்படுத்திக் கொள்வது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வெப்படை போலீசார், நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து, 10 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் வெப்படை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில இளைஞர்கள், ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகளைப் பெற்று, அவற்றை போதை ஊசிகளாக பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட கிரிஹரண்(26), சுஜித்(26), கௌரி சங்கர்(21), தீபன்(21), நந்தகுமார்(19), விக்னேஷ்(24), கௌதம் குமார்(32), இலியாஸ் உல்லா(27), சுஜித்(21), யுவராஜ்(24), கௌதம்(23), லட்சுமண்(22) உள்ளிட்ட 15 இளைஞர்களை நேற்று (மார்ச் 5) கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அவர்கள் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக தங்கள் நரம்புகளில் செலுத்தியதாக ஒப்புக்கொண்டனர். மேலும், இதற்கான மருந்துகளை ஆன்லைனில் பெற்று, ஒருவருக்கொருவர் விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 15 இளைஞர்களையும், குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதைக்கு அடிமையான இளைஞர்கள், வலி நிவாரண மாத்திரையை போதை ஊசியாக பயன்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனிடம் 1,500 வீடியோக்கள் பறிமுதல்..விடுதலைப் புலிகள் தொடர்பான வீடியோவா? - என்.ஐ.ஏ விசாரணை