திண்டுக்கல்: இருக்கை விவகாரம் தொடர்பாக பேருந்தில் இருந்த பெண்களுக்கும், நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெண்ணின் உறவினர் ஒருவர் விருப்பாச்சியில் பேருந்தை வழிமறித்து நடத்துனரை தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல் துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் பழனி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. அந்த வகையில், தனியார் பேருந்து ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பழனி செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தயார் நிலையில் இருந்துள்ளது. அப்போது, நடத்துனர் பயணிகளிடம் பழனிக்குச் செல்பவர்கள் மட்டும் முதலில் ஏறுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. நடத்துனர் அப்பெண்களிடம் பழனி செல்பவர்களுக்கு இருக்கை இல்லை. எனவே, அவர்களுக்கு இருக்கை வழங்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் அப்பெண்களுக்கும், நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பேருந்தில் பயணம் செய்த பெண்கள், இச்சம்பவம் குறித்து உறவினரிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். இந்நிலையில், பேருந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனியை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது விருப்பாச்சி அருகே பேருந்தை வழிமறித்த பெண்களின் உறவினர் ஒருவர், பேருந்து நடத்துனரை (ஈஸ்வரன்) தாக்கியுள்ளார். இது பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
வாலிபர் தாக்கியதில் காயமடைந்த தனியார் பேருந்து நடத்துனர் ஈஸ்வரன், இச்சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை தீபக் ராஜா உடல் ஒப்படைப்பு; பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸ்! - Nellai Deepak Raja Murder