மயிலாடுதுறை: மயிலாடுதுறை - திருவாரூர் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சிறுசிறு பாலங்கள் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள் தரம் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை அருகே வழுவூர் மேல வீதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் மணிகண்டன் (26).
எலக்ட்ரீசியன் பணி செய்து வரும் இவர், விவசாயப் பணிக்கு வந்த வேலையாட்களுக்கு உணவு வாங்குவதற்காக நேற்றிரவு (புதன்கிழமை) இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை - திருவாரூர் இடையேயான சாலையில் எலந்தங்குடி பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு, கம்பி அமைக்கப்பட்டு இருந்தது. உரிய பாதுகாப்பு இல்லாத நிலையிலும், அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாமலும் இருந்ததாகத் தெரிகிறது. அதனை அடுத்து, நிலை தடுமாறிய மணிகண்டன் சென்ற பைக் பள்ளத்தில் விழுந்ததில், அதில் இருந்த கம்பிகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அஜாக்கிரதையாகவும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை சாலை மறியல் தொடரும் எனக் கூறியதோடு, உயிரிழந்தவரின் உடலை அப்புறப்படுத்த விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளர் நாகவள்ளி அளித்த உத்தரவை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
அதன் பின்னர், உயிரிழந்த மணிகண்டனின் உடலை அப்புறப்படுத்தி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒப்பந்ததார திட்ட மேலாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இளைஞர் மணிகண்டன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, பெரம்பூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி திருப்பதி தலைமையில் இன்று நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர் தரப்பு மற்றும் வழுவூர் கிராம மக்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதனை அடுத்து, புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் ஒப்பந்ததாரர் கண்ணன், மேலாளர் சரவணன், நிறுவனத்தின் உதவி திட்ட மேலாளர் நாகராஜ், தள பொறுப்பாளர்கள் ஷெரீப், ஆசைத்தம்பி ஆகிய ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி திட்ட மேலாளர் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அரக்கோணத்தில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு