கன்னியாகுமரி: குமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு நோக்கி டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அந்த லாரியை 51 வயதான விருதுநகரைச் சேர்ந்த காளைச்சாமி என்ற நபர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில், வெள்ளமடம் அடுத்த சகாய நகர் பகுதியில் லாரி வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியுள்ளது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மற்றும் நின்று கொண்டிருந்த டிராக்டர், 4 மற்றும் இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சாலை ஓரத்திலிருந்த ஆர்டின் என்பவருடைய வீட்டு காம்பவுண்ட் சுவரை இடித்து கொண்டு புகுந்துள்ளது. அப்போது, காம்பவுண்ட் சுவரை இடித்துக் கொண்டு சென்ற போது, அங்கு நின்ற சொகுசு காரில் மோதி லாரி நின்றுள்ளது. இந்த விபத்தில் சொகுசு கார், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக டிராக்டர் ஓட்டுநர் ஜெயக்குமார் என்பவர் உயிர் தப்பியுள்ளார். மேலும், டாரஸ் லாரி வீட்டுக்குள் புகுந்ததை அடுத்து, அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார், டாரஸ் லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதேபோல, நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. அந்த லாரியை, கொல்லம் அருகே உள்ள கூறக்கோடு பகுதியைச் சேர்ந்த 24 வயதான அல்டாப் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், லாரி ஆரல்வாய்மொழி அருகே உள்ள முத்து நகரைக் கடந்து தேவசகாயம் மவுண்ட் விளக்கு பகுதியில் வந்த போது, எதிரே காவல்கிணறு பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்து கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில், லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த குளச்சல் அடுத்த கொட்டில் பாடு கடற்கரையைச் சேர்ந்த 23 வயதான டேனி என்ற டேனியல் என்பவர், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், அவருடன் வந்த நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான டோனி என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர், டோனியை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகர்கோவில் அடுத்துள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீசார், உயிரிழந்த டேனி என்ற டேனியல் என்பவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த 2 விபத்து குறித்தும் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணம் என்ன?: கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு செல்லப்பட்டுகிறது. இந்த கனிம வளம் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக அதிக புகார்கள் வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்காக பல்வேறு தரப்பினர் ஆங்காங்கே டாரஸ் லாரிகளை சிறைபிடித்து வைத்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இருப்பினும், அவ்வப்போது காலை நேரங்களிலும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் எழுகிறது.