புதுக்கோட்டை: ஆலங்குடியை அடுத்த வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அதிமுகவில் எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். தொடர்ந்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 2001 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2010-ல் வெங்கடாசலம் அவரது வீட்டிலேயே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அவரது நினைவுநாளையொட்டி புதுக்கோட்டை சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய நபர் கைது.. போலீசில் சிக்கியது எப்படி?
அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி அருகே வடகாட்டில் அவரது நினைவிடத்தில், ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் பயணித்து, சாலைகளில் இரும்பு கம்பிகளை உராய்த்தும், வாகனத்தில் அதிக அளவு சத்தங்களை எழுப்பியும், வீலிங் செய்தும், சாலைகளில் வந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் அங்கு பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சென்று, கூச்சலிட்டு, பேருந்துகளை வழிமறித்து அட்டகாசம் செய்துள்ளனர். இதனையடுத்து, இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்ததிற்கு வந்த போலீசார், பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். தற்போது இது குறித்த வீடீயோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்