தஞ்சாவூர்: சென்னையில் செவிலியராக பணியாற்றி வரும் தஞ்சாவூரைச் சேர்ந்த 26 வயது பெண்ணும், சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் (வயது 27) மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அப்பெண் அந்த வாலிபரிடம் பேச மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது காதலியை பணிய வைப்பதற்காக தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தில், அந்தப் பெண்ணின் புகைப்படத்தை மட்டும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பலரும் பார்க்கும் வண்ணம் பதிவு செய்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அப்பெண், தஞ்சாவூர் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகத்திற்கு சென்ற தனிப்படை போலீசார், அவரை கைது செய்து தஞ்சாவூர் முதலாவது நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றமத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், “பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் தொடர்புகொள்ளும் அடையாளம் தெரியாத நபர்களிடம் பழகி புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் விடுதலையான நபருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - sexual harassment case