ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் பஜார் தெருவில் கம்பி கடை உரிமையாளரை கஞ்சா போதையில் சில இளைஞர்கள் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் தக்கோலம் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கடையின் உரிமையாளர், கஞ்சா போதையில் மாமூல் கேட்டு இடையூறு செய்யும் இளைஞர்களால் கடை திறக்க முடியவில்லை என்று, தனது கடையின் ஷட்டரில் எழுதி வைத்துவிட்டு பூட்டிச் சென்றார். இந்த நிலையில், தக்கோலம் அருகே உள்ள பரமேஸ்வரமங்கலத்தில் ஃபிரைட் ரைஸ் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு இரவு 9 மணியளவில் 3 பேர் கஞ்சா போதையில் உள்ளே புகுந்து ஃபிரைட் ரைஸ் கேட்டுள்ளனர்.
கடை உரிமையாளர் வினோத்குமார் நேரமாகிவிட்டதால் ஃபிரைட் ரைஸ் இல்லை என்று தெரிவித்துள்ளார். அப்போது திடீரென ஃபிரைட் ரைஸ் கடையில் இருந்த கத்தியை எடுத்து, கண்மூடித்தனமாக வீசி உள்ளனர். இதனால் அச்சமடைந்த கடையின் உரிமையாளர் வினோத்குமார், அவரது தாயார் மற்றும் கடை ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேர் தப்பி ஓடி உள்ளனர்.
கஞ்சா போதையில் இருந்த கொள்ளையர்கள், ரூ.10 ஆயிரம் கேட்டு கடை உரிமையாளர் வினோத் குமாரை மிரட்டி உள்ளனர். அவர் பணம் இல்லை என்று சொன்னதும், கல்லாவைத் திறந்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு, டேபிள் மீது இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தக்கோலம் போலீசாருக்கு இரவு 9.30 மணிக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிகாலை 2 மணிக்கு சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரித்துள்ளனர். அதன்பிறகு, ரகசிய தகவலின்பேரில் இலுப்பை தண்டலம் அருகில் கஞ்சா போதையில் இருந்த 10 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இதில், ஃபிரைட் ரைஸ் கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பரமேஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கவுதம், ரவிக்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார்.. அமைச்சராக பதவியேற்கவும் ஆளுநருக்கு கடிதம்!