சேலம்: சேலம் ஏ வி ரவுண்டனா அருகே தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது பெங்களூரு - சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் இந்த ஹோட்டலில் உணவருந்திச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று வழக்கம் போல அந்த ஹோட்டலுக்கு தனியார் ஆம்னி பேருந்துகளில் இருந்த பயணிகள் சென்றுள்ளனர். அப்போது பெண் பயணி ஒருவர், ஹோட்டல் வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் கழிவறையில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார்.
கழிவறைக்குள் செல்போன் இருப்பதாகவும், அதில் வீடியோ பதிவு செய்யப்படுகிறது என தன் கணவனிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து சூரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், ஹோட்டலுக்கு விரைந்து வந்த காவல் துறையினர், கழிவறையில் துணி சுற்றியபடி செல்போன் இருப்பதும், அதில் வீடியோ பதிவாகி கொண்டிருப்பதையும் உறுதி செய்து, அந்த செல்போனை கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கழிவறையில் வைக்கப்பட்டுள்ள செல்போன், ஹோட்டலில் துப்புரவுப் பணி மேற்கொள்ளும் சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், விஜய் மீது சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் பெண்களின் வீடியோ ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய காரணம் என்ன?