ராமநாதபுரம்: உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவி ஷிப்ரா பதக் (38). இந்து துறவியான இவர் நதிகள் மற்றும் வனங்கள் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராம் ஜானகி யாத்ரா எனும் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
ஷிப்ரா பதக், அவரது தந்தை அங்கீத் பட்டேல், சகோதரர் சைலேஷ் பட்டேல் ஆகியோருடன் அயோத்தியிலிருந்து ராமேசுவரத்திற்கு இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். சத்தீஸ்கரில் அடர்ந்த காடுகளை நடந்தே கடந்த இவர்கள், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் மார்.08 ம் தேதி மாலை பரமக்குடிக்கு வருகை தந்த துறவி ஷிப்ரா பதக் அன்று சிவராத்திரி என்பதால் சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு அங்கேயே தங்கியுள்ளார். பின்னர் மார்.09 ம் தேதி காலை பரமக்குடியிலிருந்து ராமேசுவரத்திற்கு மீண்டும் பாதயாத்திரையாகப் புறப்பட்ட அவர்கள் நான்கு வழிச்சாலை வழியாகச் சென்றுள்ளார்.
அப்போது பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் பகுதியில் பாதயாத்திரையாகச் சென்ற பெண் துறவியை, திடீரென வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், ராமர் தமிழகத்தில் உள்ளாரா? என கேள்வி எழுப்பி, ஷிப்ராபதக்கின் சகோதரர் கார் மீது தாக்குதல் நடத்தி, காரில் இருந்த ராமர் கொடியைச் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கார் கண்ணாடி நொறுங்கியது. மேலும் இதில் ஷிப்ரா பதக்கிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் அப்பகுதியில் திரண்டனர். இதையடுத்து துறவி ஷிப்ரா பதக் சம்பவம் குறித்து பரமக்குடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து பரமக்குடி தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திவிட்டுத் தலைமறைவான மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக ராமர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில், ராம் ஜானகி பாதயாத்திரை வந்த உ.பி.ஐ சேர்ந்த பெண் துறவி தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.