சென்னை: போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தும், பலரை கைது செய்தும் வருகின்றனர். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் நபர் கஞ்சா பயன்படுத்தும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளை முழுமையாக பரிசோதித்து, அவர்கள் கொண்டு செல்லும் பைகளை ஸ்கேன் செய்த பிறகு தான் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில், மெட்ரோ ரயிலில் மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியும் கிடையாது.
இருப்பினும், சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் கஞ்சா பயன்படுத்தியுள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை, ரயிலில் பயணித்த சக பயணி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் வந்த இளைஞரை அனுமதித்தது எப்படி என்றும், மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர். தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள். கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா?" என பதிவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: என் கணவருக்கு பேய் பிடிச்சிடுச்சி.. மனைவியின் நாடகத்தை தெளியவைத்த பிரேதப் பரிசோதனை.. என்ன நடந்தது?