திருநெல்வேலி: கொக்கிரகுளத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (38). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது போடப்பட்ட வழக்கு ஒன்றில் வாய்தாவுக்கு ஆஜராகும்படி நீதிமன்றத்தில் இருந்து அருண்குமாருக்கு சம்மன் அனுப்பியதாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சம்மன் நகலோடு வந்த அவர், தேவையில்லாமல் என்னை இந்த வழக்கில் சேர்த்து எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள் என்று கதறியபடி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், “உளவுத்துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தங்கம் தான் எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். தேவையில்லாமல் என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளார்கள். இந்த வழக்கில் உள்ள பிற குற்றவாளிகள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் நான் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராக முடியும்? பசிக்காக திருட ஆரம்பித்தேன். பின்னர் அதையே எனது தொழிலாக மாற்றி விட்டார்கள்.
தற்போது இரண்டு ஆண்டுகளாக திருந்தி வாழ்கிறேன். பிறகு ஏன் என்னை இடையூறு செய்கிறார்கள்? அப்படியென்றால், திருந்தாமல் இருப்பது நல்லதா? தினமும் 4 செயினை அறுக்கனுமா? பணத்தை திருடனுமா? அப்படினா போலீஸ் தேடாம இருக்குமா?” என கண்ணீரோடு பேசினார். அப்போது போலீசார் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் எனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று புலம்பினார்.
தொடர்ந்து தான் அணிந்திருந்த பனியன், சட்டையைக் கழட்டி வீசி அரை நிர்வாணத்துடன் கூச்சலிட தொடங்கினார். “என்னை சீரழித்து விட்டனர். என் மீது ஒன்றுக்கு 30 கேஸ் போட்டுள்ளனர். என் வயசுல 15 வருடம் ஜெயில் வாழ்க்கை தான் தெரியுமா? 38 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. என் வாழ்க்கையைச் சீரழித்து விட்டனர். எனக்கு குடும்பத்தோடு வாழ வேண்டும் என ஆசை இருக்கிறது. எனது கால் மற்றும் கையை உடைத்துவிட்டனர். என்னை வாழ விடுங்கள், நான் ஒரு அனாதை” என்று புலம்பினார்.
முன்னதாக, கையை அறுத்துக்கொண்டு வந்த நிலையில், அங்கிருந்த காவலர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து இன்று வாய்தா உள்ளது, அதற்குள் என்னை ரிமாண்ட் செய்யப் போகிறீர்களா? செய்யுங்கள் இதே கூத்து தான் அங்கேயும் நடக்கும் என்று புலம்பினார்.
பின்னர், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் தங்கம் அங்கு வந்தவுடன், அவரிடமும் அருண்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, பாளையங்கோட்டை போலீசார் அருண்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விரைவில் துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்; சஸ்பென்ஸ் உடைந்த சீனியர் அமைச்சர்!