சென்னை: கல்மண்டபம் பிரதான சாலையில் இருந்து பாரிமுனை செல்வதற்கும், வடசென்னை, இராயபுரம் மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலை செல்வதற்கும் கல்மண்டப சாலையில் மும்முனை சந்திப்பு உள்ளது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில், இன்று காலை தண்டையார்பேட்டையிலிருந்து பாரிமுனை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் அசோக் என்ற இளைஞர் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, சாலையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான இண்டர்நெட் சேவை கேபிள்கள் (WIFI - CABLE) அசோக்கின் வாகனத்தில் சிக்கியுள்ளது. இதைக் கண்ட போக்குவரத்து போலீசார் கூச்சலிட்டு வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால், இருசக்கர வாகனத்தின் சக்கரம் முழுவதும் கேபிள் வயர் சிக்கியதால், பிரேக் பிடிக்காமல் சாலையில் சறுக்கிக் கொண்டு சென்றுள்ளார். இதில் அசோக்கின் இருசக்கர வாகனம் எதிர் திசையில் திருவொற்றியூர் நோக்கி வந்து கொண்டிருந்த 101 எண் கொண்ட மாநகரப் பேருந்து அடியில் சென்று சிக்கியுள்ளது.
நல்வாய்ப்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் லேசான காயங்களோடு அசோக் உயிர் தப்பினார். இதனையடுத்து, பொதுமக்கள் உதவியோடு போக்குவரத்து போலீசார் சாலையின் நடுவே இருந்த கேபிள்கள் அனைத்தையும் அகற்றினர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில், “சில தனியார் நிறுவனங்களின் அலட்சியப் போக்கால் இது போன்ற சம்பங்கள் அரங்கேறுகின்றன. எனவே, இது போன்று வரம்பு மீறி பாதுகாப்பற்ற முறையில் சாலையில் தொங்கும் கேபிள்களால் விபத்துகள் ஏற்படும் நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாங்குநேரி மாணவர் சின்னத்துரையை நேரில் சென்று பாராட்டிய தாடி பாலாஜி!