புதுக்கோட்டை: புதுக்கோட்டை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் உமாபதி - பூங்கோதை தம்பதியினர். இவர்களது மகன் வினோத் (27). இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது தனது திருமண நிகழ்விற்காக புதுக்கோட்டையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 2) காலை பெற்றோரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என வினோத் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் வினோத்தை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து வினோத் குதித்து, அருகில் இருந்த ஆஞ்சநேயர் கோயிலுக்குள் சென்றுள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்த அரிவாளை கையில் எடுத்துக்கொண்டு, கருவறைக்குள் பதுங்கிக் கொண்டார். மேலும், கருவறைக்குள் இருந்தபடியே அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வினோத்தை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், வினோத் தொடர்ந்து அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரை அழைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், வினோத் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கையில் இருந்த அரிவாளைப் பறிமுதல் செய்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு அவரை கயிற்றால் கட்டி, வெளியே குண்டுகட்டாக தூக்கி வந்தனர்.
இதையடுத்து, வினோத்திற்கு முதல் உதவி அளிப்பதற்காக, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வினோத் தனது சகோதரர் ஒரு வருடத்திற்கு முன்னர் இறந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!