சேலம்: 47வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் 22ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காட்டில் ஆண்டுதோறும் 'கோடைவிழா' நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 47 வது கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் 22ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக கடந்த இரண்டு மாத காலமாக விதவிதமான 50 ஆயிரம் மலர் செடிகள் தொட்டிகளில் நடவு செய்து வளர்க்கப்பட்டுள்ளன.
தற்போது அனைத்து விதமான மலர் செடிகளும் பூத்துக்குலுங்கும் நிலைக்கு வந்துள்ளது. ஏற்காடு கோடை விழாவின்போது, லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு பல்வேறு வகையான அலங்கார வடிவமைப்புகள் அமைத்து அவை பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
ஐந்து நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி ஏற்காட்டில் படகு போட்டி, செல்லப்பிராணிகள் கண்காட்சி, கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டி, பெண்கள் ஆண்களுக்கு என தனி தனியாக இன்னும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதேபோல, ஏற்காட்டில் உள்ள கலையரங்கத்தில் நடனம், இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. கோடை விழா நடைபெறும் ஐந்து நாட்களும் சேலம் நகர் பகுதியில் இருந்து ஏற்காடு செல்லும் பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் திரும்பி செல்வதற்கு குப்பனூர் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றிவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
தற்போது சேர்வராயன் மலைத்தொடரில் ஒரு வாரத்திற்கு மேலாக தினமும் மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருவதால் மலை முழுக்க இதமான சூழல் நிலவுகிறது. ஏற்காட்டின் குளிர்ச்சியை அனுபவிக்கவரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் ஆங்காங்கே திடீரென தோன்றி உள்ள அருவிகளைக் கண்டு ரசித்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீலகிரி: கனமழை காரணமாக, ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து - METTUPALAYAM UDAGAMANDALAM TRAIN