ஈரோடு: பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், வசிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும் மற்றும் வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் மற்றும் சுந்தர் மஹால் ஆகியவை சார்பில் இன்று (ஜூலை 17) புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக்கண்காட்சியில் தினந்தோறும் எழுத்தாளர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் முதல் நாளான இன்று 'நீர்வழிப் படூஉம்' நாவலின் ஆசிரியரான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி கலந்துகொண்டார்.
மேலும், இந்த கண்காட்சியில் தமிழ் இலக்கியம், இந்திய வரலாறு, அரசியல், கவிதை, சிறுகதைகள், அறிவியல், வீரப்பன் குறித்த புத்தகம், விவசாயம், குழந்தை தாலாட்டு, நீர் மேலாண்மை, நீதிமன்றம், பொது அறிவு, அகராதிகள் குறித்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுமட்டும் அல்லாது, மாணவ, மாணவியரின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்பதற்காக சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று தொடக்க விழவிற்கு வருகைதந்த மாணவ, மாணவியர்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை பார்வையிட்டு அதில், அறிவியல், கதை, தமிழ் இலக்கியம், அரசியல் சார்ந்த புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக, விழாவில் கலந்துகொண்ட எழுத்தாளர் தேவிபாரதி ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்துக்கு சிறப்பு பேட்டி ஒன்றை வழங்கினார். அப்போது பேசிய அவர், "எழுத்தாளர்களாக வேண்டுமெனில் முதலில் உரையாடல்கள் நிகழ்த்த வேண்டும். இதன் மூலம் வளர்ச்சி அடைந்து அடுத்தகட்டத்துக்குச் செல்ல இயலும்.
சிறுகதை எழுத்தாளர்களாக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும். நாங்கள் படிக்கும்போது புத்தகக் கண்காட்சிகள் இல்லை. படிக்கப் போவதே அரிதான ஒன்று. ஆனால் இன்று அப்படியில்லை. எல்லா இடங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்துவதால் சிறுவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரது மத்தியிலும் வாசிப்பு பழக்கத்தை ஏற்பட்டுள்ளது.
வாசிப்பு சமூகத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. தற்போது உள்ள வாசகர்கள் எது தேவையோ அதை எடுத்துக்கொள்கின்றனர். தேவையற்றதை நிராகரிக்கின்றனர். எனது 'நொய்யல்' நாவல் நல்ல புத்தகமாக இருந்தாலும் இன்று வரை அதிகம் பேசப்படவில்லை. ஆனால், புதிய வெளிச்சம் அதற்கு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை" என்று எழுத்தாளர் தேவிபாரதி கூறினார்.
இதையும் படிங்க: 50% அரசு மானியத்துடன் கோழிப்பண்ணை.. எப்படி விண்ணப்பிப்பது? - குமரி ஆட்சியர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்