தேனி: போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த நிலையில், கயிறு கட்டி பாதுகாப்பாக தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.
போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, கொட்டகுடி, டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி, கொழுக்குமலை, அத்தி ஊத்து பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில், போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்தி ஊத்து மலைப் பகுதியில் உள்ள கொழுக்குமலை தேயிலை மற்றும் ஏலத் தோட்டத்தில் வேலைக்குச் சென்ற கூலித் தொழிலாளர்கள் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அவர்கள் தங்கி இருந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக, அருகே உள்ள பாறை உருண்டதால் தொழிலாளர்கள் தங்கி இருந்த வீடுகள் மண்ணில் சரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக அருகிலுள்ள தோட்டத்தில் பாதுகாப்பாக தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போடிநாயக்கனூர் தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதிகாலையே சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், அங்கிருந்த கூலித் தொழிலாளர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து பாதுகாப்பாக கரை சேர்த்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்