தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சிவகாசியில் தயார் செய்யக்கூடிய வெடிகளை குடோனில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். முக்கியமாக திருமணம், கோயில் திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சிக்கு இங்கிருந்து பட்டாசுகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று இரவு 7 மணியளவில் திடீரென பட்டாசு வைத்திருந்த குடோனில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் பணியில் இருந்த அரசகுளம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (21) மற்றும் நாசரேத் பகுதியைச் சேர்ந்த விஜய் (25) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாசரேத் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரசாத் (20), செல்வம் (21), செந்தூர் கனி (45) மற்றும் முத்துமாரி (41) ஆகிய 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பழக்கடை வியாபாரி மீது தாக்குதல்.. ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி மகன் உட்பட 3 பேர் கைது!