சென்னை: சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரில், 'சென்னை மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர், அந்த கோவிலுக்கு தான் சென்றபோது தன்னுடன் நட்பாக பழகி வந்ததாகவும், அதன் பிறகு, தன்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்துவிட்டார்' எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் தனிப்படை அமைத்து கார்த்திக் முனுசாமியை தீவிரமாக தேடிவந்த நிலையில் தற்போது அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த புகாரில் முகாந்திரம் இருப்பதால் அதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தொடர்ந்து அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில சட்டப்பிரிவுகளிலும் அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:10 வயது சிறுமியைக் கட்டி வைத்து பாலியல் தொந்தரவு.. திருப்பத்தூரில் 63 வயது முதியவர் போக்சோவில் கைது! - Tirupathur POCSO Case