தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டில் உள்ள மூலக்கடை கிராமத்தில் லிங்கராஜ் மற்றும் நிரஞ்சனா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அணைக்கரைப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார்.
கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த பிரபாகரன், பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுக்கிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆண்டு நிரஞ்சனா தேவியிடம், பிரபாகரன் தான் கஷ்டப்படுவதாக கூறி பணம் கேட்டுள்ளார்.
அப்போது நிரஞ்சனா தேவி கடையில் அடகு வைத்திருந்த 25 பவுன் தங்க நகையை மீட்டு பிரபாகரனிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு மாதங்களில் நகையையும் அதற்கான வட்டியையும் சேர்த்துக் கொடுத்ததாகக் கூறி வாங்கிச் சென்று, கடந்த நான்கு ஆண்டுகளாக பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இதுகுறித்து அவர் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு சென்று கேட்டால், அவர் பணியில் இருந்து பணியில் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டிற்கு சென்றால் அங்கு யாருமே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் தனது பணம் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிரஞ்சனா தேவி, நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளேயே தற்கொலை முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நிரஞ்சனா தேவி கூறியதாவது,"கரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்படுவதாக கூறி எங்களிடம் 25 சவரன் நகையை வாங்கிய பிரபாகரன், 4 ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார்.
வாங்கிய நகையை மீட்க வேண்டும் என பலமுறை அவரது வீட்டில் சென்று பார்த்துவிட்டேன், ஆனால் அங்கு அவர் இல்லை என கூறுகின்றனர். இதனால்தான் செய்வதறியாது இது போன்ற முடிவுக்கு வந்தேன். என்னுடைய நகையை மீட்டுத் தர வேண்டும், முன்னாள் காவலர் பிரபகாரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலையைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் நடந்து சென்ற தொழிலாளியை கடித்துக் குதறிய நாய்: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!