திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், மானூர் தாலுகாவிற்கு உட்பட்ட தென்கலம், தென்கலம் புதூர், நல்லம்மாள்புரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விவசாய மூலிகைச் செடிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளது. இந்த நிலையில், தென்கலம் கிராமத்தில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று சோலார் பேனல் அமைத்து மின்சாரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்திற்காக, அங்குள்ள விவசாயிகளை ஏமாற்றி முறைகேடாகப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பலரின் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும், மேலும் சிலரின் நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கியதாகவும் தென்கலம் கிராம மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
இதுமட்டும் அள்ளாது, இந்த பகுதியில் 2000க்கும் மேற்பட்ட மாடுகள் மூலமாகத் தினமும் 10,000 லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களாகவும் அந்த பகுதி பயன்படுகிறது. நிலத்தைத் தனியார் நிறுவனம் எடுத்துக் கொண்டதால் கால்நடைகள் மேய்ச்சல் மற்றும் விவசாயம் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாக சோலார் பேனல் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், இந்த பகுதியில் மீதம் உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், இது தொடர்பாக, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்குப் பல முறை புகார் அளித்ததாகவும், அந்த புகார் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்ட மக்கள் தென்கலம் கிராம மையப் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக அவர்கள் விவசாய நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், குடியரசு தினமான இன்று (ஜன.26) தென்கலம், அலவந்தான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளிலும் கிராமத்தின் முக்கிய பகுதிகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அரசிற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், மக்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாது - ஆம்னி பேருந்துகள் சங்கம் திட்டவட்டம்!