ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பேருந்து நிலைய வளாகத்தில், பரண் அமைப்பு சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கடம்பூர் மலைக்கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்கள் பங்கேற்றனர். மேலும், பழங்குடியினரின் பாரம்பரிய பீனாட்சி வாத்திய இசைக்கு பெண்கள் நடனம் ஆடினர்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் புகைப்படத்திற்கு மலர் தூவி, ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர். பின்னர், “சிறுமியின் கொலைக்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை எங்கள் குடும்பத்தில் பயன்படுத்த மாட்டோம். பயன்படுத்தினால் எதிர்ப்போம். போதைப்பொருள்களுக்கு எதிராக போராடுவோம். குடும்பத்தில் மது அருந்துவோரை தண்டிப்போம்” என உறுதி மொழி ஏற்றனர்.
தொடர்ந்து கஞ்சா போதைப்பொருட்களின் பெயர்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட காகித அட்டைகளை தீயிட்டுக் கொளுத்தி, போதைப்பொருள்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். அதேபோல், கடம்பூர் மலைப்பகுதியில் கஞ்சா பயன்பாடு தெரிய வந்தால் அவர்களை காவல் துறையிடம் ஒப்படைப்போம் எனவும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், போதைப்பொருள்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். மேலும், கடம்பூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற பழங்குடியின சங்கக்கூட்டத்தில் ராகி, சோளம், தட்டை பயிறு, கம்பு போன்ற தானியப் பயிர்களை 21 மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றுவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மகா கவிதை நூலுக்காக பெருந்தமிழ் விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து!