தஞ்சாவூர்: தஞ்சாவூர், சோழர் காலம் முதல் கலைகளுக்குத் தாயகமாகத் திகழ்கிறது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஓவியம், கலைத்தட்டு, வீணை, நெட்டி ஆகிய வேலைப்பாடு வரிசையில், தஞ்சாவூர் கண்ணாடி பொருள்களும் ஒன்றாகும், இந்த கண்ணாடி பொருள்கள் நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் வந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி மன்னர் அளித்த ஆதரவுதான், இக்கலை வளர்ச்சி அடைய காரணமாக இருந்துள்ளதாக கருதப்படுகிறது. மராட்டியர் மன்னர்கள் காலத்தில், தஞ்சாவூர் ஓவியத்திற்கு மெருகூட்டுவதற்காக பக்கவாட்டில் கண்ணாடித் துண்டுகள் பொருத்தும் பழக்கம் இருந்துள்ளது. அது நாளடைவில், கண்ணாடித் துண்டுகளில் இருந்து கலைப் பொருள்களை உருவாக்கும் விதமாக, இக்கலை பரிணாம வளர்ச்சி பெற்றது.
மேலும், கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு பல வகையான கலைப்பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் கோயில், பள்ளியறை மண்டபம், பல்லக்கு போன்ற கோயில் தொடர்பான பொருள்கள் மட்டுமே செய்யப்பட்டன. காலப்போக்கில் திருமண மண்டபத்தில் தூண்கள், வளைவுகள், மணவறை உள்ளிட்டவை கண்ணாடி பொருள்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதுமட்டுமல்லாது, பல்லக்கு மற்றும் குதிரை வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கண்ணாடித் துண்டுகளைப் பதித்து அலங்காரம் செய்யும் நிலைக்கு இக்கலை உயர்ந்தன. சாதாரண மக்களும் வாங்கும் விதமாக பூர்ண கும்பம், தட்டு, வீடுகளில் பூஜை மண்டபம், குடம், செம்பு, கூம்பு போன்றவற்றிலும் கண்ணாடி பொருள்களால் அலங்காரம் செய்யப்பட்டன.
தாம்பூலத்தட்டு, சந்தனக் கிண்ணம், குங்குமச்சிமிழ், நகைப்பெட்டி, அரசாணிப் பானைகள் (அடுக்குப் பானைகள்), சில்வர் உருளி பானைகள் போன்றவற்றிலும் கலை நயத்துடன் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்படுகின்றன. பாதரசம் பூசப்பட்ட கண்ணாடிகள், பாரம்பரிய பச்சை, சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்ட கண்ணாடிகள், தங்கப்பட்டை, சுக்கான் தூள், புளியங்கொட்டைத் தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேவையான வடிவங்களில் இந்த கண்ணாடிப் பொருள்கள் செய்யப்படுகின்றன.
ஆனால், தற்போது இக்கலைப் பொருள்களை ஒரு சில குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றன. அந்த வகையில், இத்தொழிலை தஞ்சாவூர் தெற்கு வீதியைச் சேர்ந்த வனஜா (52) - செல்வராஜ் (64) தம்பதியினர் தற்போதும் பாரம்பரியமாக இத்தொழிலைச் செய்து வருகின்றனர்.
இது குறித்து வனஜா கூறுகையில், "எனது கணவர் செய்வதைப் பார்த்து இக்கலையில் எனக்கும் ஆர்வம் வந்தது. பின்னர் அதனை எனது கணவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். தொடக்கத்தில் சிறு, சிறு பொருள்கள் செய்வதற்கு கற்றுக் கொண்டு, படிப்படியாக தேர், பல்லக்கு உள்ளிட்ட பெரிய பொருட்களைச் செய்வதற்கும் கற்றுக்கொண்டு, தற்போது நான் இப்பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்.
தற்போது இந்த கலையை நாங்கள் செய்கிறோம். ஆனால், இந்த கலையை வளர்க்க வேண்டும் என்றால், அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும். இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்காக ஆர்வத்துடன் முன் வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அப்படி பயிற்சி அளிக்க அரசும் உதவி செய்ய வேண்டும்.
மேலும், வெளிநாட்டில் இந்த கலைப் பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆகவே, இளைஞர்கள் ஆர்வமாக இத்தொழிலை கற்றுக் கொண்டால், தொழில் வாய்ப்பும் கிடைக்கும் மற்றும் இக்கலையின் மூலம் தஞ்சையின் பெருமை மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வனஜாவின் கணவர் செல்வராஜ் கூறும்போது, "நான் சிறு வயது முதல் இக்கலைத் தொழிலைச் செய்து வருகிறேன். ஆனால், தஞ்சாவூரின் பாரம்பரியமான இத்தொழிலில் போதுமான வருமானம் இல்லை என்று பல கலைஞர்கள் வெவ்வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டனர். குறிப்பாக, அடுத்த தலைமுறையினர் இந்த கலையில் ஆர்வம் இல்லாததால் இத்தொழில் நலிந்து வருகிறது. தற்போது எங்கள் குடும்பம்தான் இந்த கைத்தொழிலைச் செய்து வருகிறோம். என்னோடு இந்த கலை அழிந்துவிடக்கூடாது. இளைஞர்களுக்கு இந்த கலையைக் கற்றுக்கொண்டு, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பண்ணாரியில் தாயை இழந்து பரிதவித்த குட்டி யானை வனத்தை விட்டு வெளியேறியது!